குணாதீதனாக இருத்தல்

முக்குணங்களில் ஜீவனுக்கு மூன்று சரீரங்கள் அமைந்துள்ளன. தாமசத்தில் சுஷுப்தியும் (தூக்கமும்), ராஜஸத்தில் ஸ்வப்னமும் (கனவும்), சாத்விகத்தில் ஜாக்கிரமும் (விழிப்பும்) தோற்றுவிக்கின்றன.

ஜாக்கிரத்தில் கருவிகரணங்களுக்கு சாட்சியாகவும், ஸ்வப்னத்தில் மனதிற்கு சாட்சியாகவும், சுஷுப்தியில் தனக்குத்தானே சாட்சியாகவும் விளங்கி, துரியத்தில் அகண்டாகாரமான ஸ்வரூப வடிவமாக உள்ள அதற்கு அன்னியமாக யாதுமில்லை. என்றும் தான் தனதற்ற நிலை, சச்சிதானந்த இன்ப வடிவம். இதையறிந்து இவ்விதம் அன்வயப்படுத்தும் காலம் நினைவு கனவில் ஒடுங்கும்; கனவு சுஷுப்தியில் ஒடுங்கும்; சுஷுப்தி துரியத்தில் ஒடுங்கும். இவ்விதமே மூன்று அவஸ்தைகளுக்குள்ள மூன்று குணங்களும் ஒடுங்கி, மூன்று சரீரங்களும் அடங்கி, நான்காவது துரிய அவஸ்தையில் தன்னிலை தானாகவே நிகழும்.

இவ்வொளி வந்தவுடன், இருட்டு எங்கே போனது என்றும், எப்படிப் போனது என்றும், இல்லாத மாயை உண்டு என்கிற பிராந்தியும் நசிக்கும். அகங்கார மமகாரங்கள் நசித்து, தனது இயற்கையான சிவ வடிவத்தில் விச்ராந்தி உண்டாகும். இதை நிரதிசயானந்தம் என்றும், ஸ்வானுபூதி என்றும் அறிஞர்கள் கூறுவார்கள்.
அகண்ட மண்டலாதாரமானவரும் பரம்பொருளானவருமான ஸ்ரீ சற்குருநாதனின் கடாக்ஷத்தால் மாயையான இருள் மறைப்பு விலகித் தனது இயற்கை சச்சிதானந்த வடிவமே என திடப்பிரக்ஞையுடன் இருப்பதே ஜீவன்முக்த லக்ஷணம்.

இத்திசையில் இவர்கள் மற்ற ஜீவன்களிடத்து தோற்றப்பட்டதும், பிராந்தியினால் உண்டானதுமான அனைத்தையும் கண்ணாடி நிழல் போலக் கருதுவார்கள்.
ஸத்வ குணம் மேலிட்டவன் இவ்வுலக வாழ்க்கையின் லக்ஷியமான ஸ்வரூப நிஷ்டையை அடைவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பான். அதற்குச் சாதகமாகத் தனக்கு இவ்வுலகில் வந்தமையும் கர்மங்களை ஆண்டவன் பணி என அகப்பற்று, புறப்பற்று இன்றி செய்து கொண்டிருப்பான். அவன் இந்தப் பிரபஞ்சத்தை ஆண்டவன் அருட்கோலம் எனக் கருதி வாழ்வான்.

அடியாரிடத்து ஆண்டவனிடத்தில் போன்ற அன்பூ ஈசுவரத் தியானம், சாத்விக மிதாஹாரம், ஸத்சங்கம், சாந்தி, ஸதாசார்யசேவை இவை போன்ற கல்யாண குணங்கள் அவனிடத்தில் பொன்போல் பிரகாசிக்கும்.

ரஜோகுணம் மேலிட்டவன் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற கருத்து ஊன்றப் பெற்றவனாய், காற்றில் காற்றாடி பறப்பது போல் ஆசைக் காற்றில் சித்தத்தைப் பறக்கவிட்டு அலைந்து கொண்டு அமைதி என்பது இன்னதென்று கூட உணராமல் வாழ்வான்.
தமோகுணம் மேலிட்டவனிடம் பிராணிஹிம்ஸை, கள்ளுண்டல், கவறாடல்,பொய்மொழிதல், அஸத்சங்கம், சோம்பல், பெருந்தூக்கம், பெருந்தீனி, பெருங்கோபம், சாரமற்ற ஊசிப்போன ஆகாரத்தில் ருசி முதலிய துர்குணங்கள் காணப்படும்.

ஸத்வ குணமுள்ளவர்கள் பக்குவத்திற்கேற்ப ஸத்கதி, ஸஜ்ஜன்மங்களை அடைவர். பிறவிப்பிணி நீங்கி பேரின்ப வாழ்வெய்துவர். மற்ற இருவர் துர்கதி, துர்ஜன்மங்கள் எய்தி ஓயாமல் அல்லல் உறுவர்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *